வியாழன், 25 ஜனவரி, 2018

               
இதுதான் அரசாங்கமா ? இதுதான் நாட்டுப்பற்றா ?

   என்னரும் இந்தியத்திருநாடே
                                                    நீ கண்ணிருந்தும் குருடா ?

              1971 ஆகஸ்ட் 22 ம் நாள்.

                         வீறுகொண்ட நடையுடன் விண்ணளவு கனவுகளுடன் அந்த பயிற்சி இராணுவ அதிகாரி முக்கிய விருந்தினருக்கு முன்னே கைவீசி நடக்கிறார்.அவர் பெயர் விஜேந்தர சிங் குறுங் .

                                    


                  அது சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி தளம்.

                   சுமார் பத்து மாத பயிற்சிக்குப்பின் அந்த இளைஞர்கள் இன்று இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

                          விழாவை பார்வையாளர்கள் இடத்திலிருந்து ஏராளமானோர் பார்த்துப் பரவசமடைகிறார்கள்.இந்தியா என்ற இம்மாபெரும் தேசத்தைக் காப்பாற்ற வலிமைகொண்ட எண்ணற்ற இளைஞர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்....வந்துகொண்டே இருப்பார்கள்.....

                             பார்த்தொழில் அனைத்தும் கொண்ட 
                                     பயன்தரும் ஆலைக்கூட்டம் 
                            ஆர்த்திடக் கேட்கும்போதும் 
                                   அணிபெறத் தாய் நாட்டினர் 
                           போர்த்தொழில் பயில்வதெண்ணிப் 
                                    புவியெல்லாம் நடுங்கிற்றென்ற 
                            வார்த்தையைக் கேட்டு நெஞ்சு 
                                        மகிழ்ந்து கூத்தாடுதே.

          இராணுவ அணிவகுப்பு முடிந்து அதிகாரியாக நியமிக்கப்பட்ட இளஞ்சிங்கங்கள் வீறுகொண்டு பாய்வதைப்போல்  அவர்கள் நாட்டின் நான்குபுறமும் பறந்து சென்று தங்களது படைப்பிரிவை அடைகிறார்கள்.

                           நமது நண்பர் வீ,எஸ் .குறுங் 3 Assam.என்ற படைப்பிரிவுக்கு அனுப்பப்படுகிறார்.அவர்கள் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அஃனூருக்கு அருகில் சாம்ப் (chamb-jaurian sector ) என்ற  எல்லைப்பாதுகாப்பிலிருக்கிறார்கள்.


                                                                           1971 ல் ஆகஸ்ட் -செப்டம்பர் போன்ற மாதங்களில் இந்தியத் திருநாட்டில்  என்ன நடந்துகொண்டிருந்தது என்று வாசகர்கள் சற்றே பின்னோக்கி எண்ணிப்பார்க்கலாம். 
                    1971 மார்ச் மாதம் கிழக்கு பாகிஸ்தானில் கலவரம் வெடிக்க ஏராளமான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள்.இதனால்  இந்திய பாகிஸ்தானிய எல்லைப்புறம் மிகவும் பதட்டமாக இருக்கிறது.

                   சென்னையிலிருந்து போர் பதட்டமுள்ள எல்லைப்புறம்.....என்னே ! ஒரு மாற்றம் நம் நண்பர் குறுங் க்கு.

                          அனுமானித்தபடியே 01 டிசம்பர் 1971 ல் இந்திய பாகிஸ்தானிய போர் ஆரம்பமாகிறது.

                    பாகிஸ்தானிய 1 Armoured Division ஜெனரல் யாயாகான் தலைமையில் முதல்நாள் போரிலேயே இந்திய எல்லைப்புறம் சாம்ப்-ஜவுரியான் வீழ்த்தப்பட்டு பல இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்.

                          நண்பர் வீ.எஸ்.குறுங் பாகிஸ்தான் சிறையில்..........

              போர்க் கைதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று ஐ .நா  சபையின் கோட்பாடு குறிப்பிடுகிறது.ஆனால் பாகிஸ்தான் அவைகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இந்திய வீரர்களை மனிதாபமற்ற முறையில் சிதைக்கிறது.
                    எண்ணங்கள் சிதற...... இதயம் சிதற.......பாத்திரம் தரையில் உருள்வதுபோல் உருட்டப்பட்ட நண்பர் குறுங் மூளை சிதறி பைத்தியமாக 1973 ம் ஆண்டு World Red Cross ன் உதவியுடன் இந்தியா திரும்பினார்.

                                இந்தியத்திருநாடும் இந்திய இராணுவமும் மிகவும் நேர்மையுடன் ( ! ) செயலாற்றி  எந்தவிதத்திலும் பணியாற்ற முடியாத குறுங் கை Medically Boarded out .செய்கிறது.
   
                     கேப்டன் வீ.எஸ்.குறுங் என்றஒரு இராணுவ அதிகாரி இராணுவ தடயங்களிலிருந்து மறைந்து போனார்.

                                ஆனால் வீ.எஸ்.குறுங் என்ற தனி மனிதன் என்ன ஆனார் ? 

            டேராடூனுக்கருகில் ஒரு கிராமத்தில் 6க்கு 8 என்ற ஓலைக்குடிசையில் தினக்கூலியாக இருந்துகொண்டு விறகு பொறுக்கி தானே சமைத்துக்கொண்டு நாட்களை செலவிடுகிறார்.

                        அதிர்ஷ்டவசமாக அவர் அடையாளம் காணப்பட்டு தன்னலமற்ற இராணுவத்தினர் சேவை அமைப்பு ஒன்றின் உதவியுடன் புனர்வாழ்வுக்கு திரும்ப  முயற்சிக்கிறார்.

               இன்றைய கேப்டன்  குறுங்கை சிந்திப்போம் வாருங்கள்.


                                                            

                இதுதான் இந்த நாடு இராணுவத்தினருக்கு கொடுக்கும் நன்றிக்  கடன்.இளமை இழந்து,இனிய கனவுகள் இழந்து தனது வாழ்க்கையே இழந்து நிற்கும் இந்த அதிகாரி போல் எத்தனையோபேர்கள் ............

                     போர்வீரர்கள் ,போரிலே வீர மரணமடைந்த வீரரின் குடும்பங்கள் ஒரு காலத்தில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் ......இப்படி எத்தனையோ பேர்கள்........

                      ye mere wathanki logo
                                  jaraa yaath karo kurupaani...