ஞாயிறு, 6 நவம்பர், 2016

                                 உங்களைச் சுற்றி ஒரு பூந்தோட்டம். 

                       அண்டை  மாநிலமான கர்நாடகாவில் உருவாகும் பொன்னி வள நதி காவிரி ஒரு காலத்தில் தனது செல்வங்களையெல்லாம் வாரி வழங்கியது தமிழ்நாட்டிற்குத்தான்.
                            கர்நாடகாவில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டியபிறகும் அவர்களது பாசன பரப்பளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த பிறகுதான் நதிநீர் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்து தமிழகத்தை  பாலைவனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.
                       விஞ்ஞான அறிவு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில் பள்ளத்தை நோக்கி ஓடிவரும் நீரின் இயற்கைக் குணத்தை மக்கள் மாற்றியமைத்து மேடான பகுதிகளில் பாயுமாறு மாற்றினாலும் இயற்கை பொங்கி எழும்போது விஞ்ஞானம் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாது.
                    அப்படி பள்ளம் நோக்கிப்  பாய்ந்து வரும் காவேரி பல கிளைகளாகப் பிரிந்து தமிழ்நாட்டைக் குறுக்கிலும் நெடுக்கிலுமாகக் கடந்து பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டிணத்தில் கடலோடு கலக்கிறாள்.
                      தென் தமிழகத்தின் காவேரிக்கரையோரத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பான்மையோர் நுங்கும் நுரையுமாகப் பாய்ந்தோடும் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தவர்கள் மட்டுமல்லாது வளம் செறிந்த தமிழ்மொழியிலும் மூழ்கி மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது சரித்திரம் சொல்லும் உண்மை 

Image result for River cauvery in tamilnadu


                    பழைய தஞ்சை மாவட்டத்தின் பெரு நகரங்களான தஞ்சாவூர் ,திருவாரூர் ,காவிரிப்பூம்பட்டிணம் போன்றவை வரலாற்றின் பல காலக்கட்டங்களில் சோழப்பேரரசின் தலை நகரங்களாக விளங்கியுள்ளன.
                              இந்த மண்ணில் வீரமும் விவேகமும் தேனும் பாலும் கலந்ததுபோல் ஒன்றுக்கொன்று உறுதுணைநின்று ,பல வீர விவேக காவியங்கள் உருவாக காரண மாக இருந்திருக்கின்றன.
                              பல்லவ மன்னன் நரசிம்கவர்மனிடம் படைத்தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி.வாதாபி போரில் சாளுக்கிய மன்னன் புலிகேசியை வெற்றிகொண்ட படைத்தளபதி பரஞ்சோதி ,பின்னர் சொந்த ஊர் திரும்பி தீவிர சிவதொண்டராகமாறி பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்ட நாயனார் என்று புகழடைந்து பெயரும் புகழும் பெற்ற ஊர் திருச்செங்காட்டாங்குடி.
                     

Image result for thiruchenkattangudi siva temple

                 சோழநாட்டை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுள் ஒருவர் முதற்குலோத்துங்க சோழன்.அவரது அவைப்புலவர்களுள் ஒருவர் ஜெயங்கொண்டார்.குலோத்துங்க சோழனின் புகழ் மிக்க படைத்தலைவர்களுள் ஒருவர் கருணாகரத்தொண்டைமான். அவரின் பராக்கிரமப்  போர்களில் ஒன்று கலிங்கப் போர் .





                            கலிங்கப்போரின் பராக்கிரமங்களையும் வீரர்களின் தீவிர நாட்டுப்பற்றையும் தமிழுலகம் போற்ற தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று புகழ் பெற்ற கலிங்கத்துப்பரணி பாடிய புலவர் ஜெயங்கொண்டார்.இவர் பிறந்த ஊர் தீபங்குடி.
                          திருச்செங்காட்டங்குடி மற்றும் தீபங்குடி என்ற இரண்டு ஊர்களும் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுக்காவில் உள்ளன.இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15,கி.மீ.வீரத்திற்கும் விவேகத்திற்கும் விளக்கம் அளிக்கக்கூடிய அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள ஊர் சன்னாநல்லூர். 
                           சன்னாநல்லூரில் பிறந்து வளர்ந்து இராணுவ அதிகாரியான கர்னல் கணேசன் இந்தியத் திருநாட்டின் தென் துருவ ஆய்வு தளமான தக்ஷின்  கங்கோத்ரிக்குத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
                                  பலவிதமான மருத்துவ சோதனைகளுக்குப்பிறகு அவர்தான் தலைவர் என்று அறிவிக்கப்பட்டவுடன் சன்னாநல்லூர் வந்து தான் பிறந்து வளர்ந்த வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்துக்கொன்டுபோய்  தென் துருவம் சென்றவுடன் ஆய்வுத்தளத்தைச்சுற்றி தூவினார்.
                       சுமார் 480 நாட்கள் பணியாற்றி  திரும்புகையில் அங்கு சுமார் 50கோடி வருடங்களாக 5000மீ  காண பரிமாண உறைபனிக்கிடையில் கிடந்த சுமார் ஒருடன்  எடையுள்ள கற்பாறைகள் நாலைந்து எடுத்து வந்து தமிழகத்தின் சில இடங்களில் அகத்தூண்டுதல் பூங்கா அமைத்துள்ளார்.





              சன்னாநல்லூர்  அவர் பிறந்த ஊர் என்பதால் அங்கு அமைக்கப்பெறும் பூங்கா தனித்துவம் கொண்டதாக நூலகம்,தியானமண்டபம்,சிந்தனை அரங்கம்,மற்றும் உந்து சக்தி முகாம்கள் கொண்டதாக இருக்கும்.
                    பேரளம் வேதாத்திரி மகரிஷி "பெரு வெளி ஆலயத்தின்" தலைவர் டாக்டர்  அழகர் ராமானுஜம் அவர்களால் 23-12-2012 அன்று சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.



                        தமிழகம் கோவில்களின் மாநிலம் என்பது எல்லோரும் அறிந்ததே.கோவில்கள் இல்லாத ஊர்களையே தமிழகத்தில் பார்க்கமுடியாது.அப்படியிருக்க சன்னாநல்லூரைச்சுற்றி கோவில்கள் இல்லாமலிருக்குமா ?
                    அதனால்தான்" உங்களைச்சுற்றி  ஒரு பூந்தோட்டம் "என்று தலைப்பிட்டேன்.சன்னாநல்லூரைச்சுற்றி மிகப் பிரசித்திப்பெற்ற கோவில்கள் இருக்கின்றன.
                    அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் வந்து தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறோம்.















3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான முயற்சி
    அழைப்புக்கு நன்றி
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு